சமூக விரோதிகளின் கூடாரமான வனத்துறை ஊழியர் குடியிருப்பு


சமூக விரோதிகளின் கூடாரமான வனத்துறை ஊழியர் குடியிருப்பு
x

கம்பம் அருகே, சமூக விரோதிகளின் கூடாரமாக வனத்துறை ஊழியர் குடியிருப்பு திகழ்கிறது.

திண்டுக்கல்

புலிகள் சரணாலயம்

தேனி மாவட்டத்தில் கம்பம் மேற்கு, போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, ஆகிய வனச்சரகங்கள் இயற்கை வனக்கோட்டமாக உள்ளன. இதேபோல் கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனூர், வருசநாடு, கண்டமனூர், மேகமலை ஆகிய 6 வனச்சரகங்கள் மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், புலிகள் சரணாலயமாகவும் உள்ளன.

இந்த வனப்பகுதியில் தேக்கு, சந்தனம், தோதகத்தி உள்ளிட்ட மரங்களும், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள், மர அணில், சிங்கவால் குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை மூலிகைகளும் உள்ளன.

வனவிலங்குகள் வேட்டை மற்றும் விலை உயர்ந்த மரங்கள் வெட்டுவதை தடுக்க வனச்சரகங்களை எல்லையாக பிரித்து, ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை ஊழியர்களுக்காக ஆங்காங்கே குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

பாழடைந்த குடியிருப்பு

அதன்படி கம்பம் கிழக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வனத்துறை ஊழியர்களுக்கு, கடந்த 50 வருடங்களுக்கு முன்பு குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த கட்டிடம், போதிய பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதையடுத்து பழைய கட்டிடத்தை அகற்றாமல், அதன் அருகிலேயே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தற்போது அந்த குடியிருப்பில் வனத்துறை ஊழியர்கள் தங்கி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே பாழடைந்த நிலையில் இருந்த குடியிருப்பு கட்டிடம் அப்படியே உள்ளது. இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அந்த கட்டிடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.

மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக வனத்துறை ஊழியர் குடியிருப்பு திகழ்கிறது. அங்கு அமர்ந்து சிலர் மதுபானம் குடிக்கின்றனர். பணம் வைத்து சூதாடி கொண்டிருக்கின்றனர். இதுமட்டுமின்றி அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிர் பலி வாங்க காத்திருக்கிறது. எனவே எந்த பயன்பாடும் இன்றி பாழடைந்த நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story