திடீரென நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்
நாகையில், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென நடுவழியில் நின்றது. ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 1½ மணி நேரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
நாகையில், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென நடுவழியில் நின்றது. ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 1½ மணி நேரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
தோணித்துறை ரெயில்வே கேட்
நாகை தோணித்துறை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள், அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.
போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் ரெயில்கள் செல்லும்போது தோணித்துறை ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
நடுவழியில் நின்ற சரக்கு ரெயில்
ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் நாள்தோறும் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து திருச்சிக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று வந்தது. தோணித்துறை ரெயில்வே கேட் வளைவு அருகே வந்தபோது சரக்கு ரெயில் என்ஜின் நடுவழியில் திடீரென நின்றது. இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்
நீண்ட நேரம் ஆகியும் ரெயில் புறப்படாததால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகர் தலைமையிலான ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது ரெயில் என்ஜின் இழுவை திறன் குறைந்ததால் நின்றுவிட்டது தெரிய வந்தது. பின்னர் இழுவை திறன் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து சரக்கு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இழுவை திறன் குறைந்தது
இதுகுறித்து ரெயில்வே துறையினர் கூறுகையில், பாரம் ஏற்றி செல்லும் சரக்கு ரெயிலின் சக்கரங்களுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே மழை, பனி காலங்களில் பிடிமானம் இருக்காது. அப்போது மேடான பகுதியில் இழுவை திறன் குறையும்.
தோணித்துறை ரெயில்வே கேட் அருகே மேடான பகுதி என்பதால், இன்று(அதாவது நேற்று) பாரம் ஏற்றி வந்த சரக்கு ரெயில் இழுவை திறன் குறைந்து பாதியிலேயே நின்றது. சக்கரங்களுக்கும், தண்டவாளத்திற்கும் இடையே பிடிமானம் ஏற்படுத்துவதற்காக தண்டவாளத்தில் மண்ணை கொட்டி சரக்கு ரெயிலை அங்கிருந்து புறப்பட செய்தோம் என்றனர்.
1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சரக்கு ரெயில் நடுவழியில் நின்றதால் நாகை தோணித்துறை ரெயில்வே கேட் பகுதியில் 1½ மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் காத்துக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.