ராசிபுரம் அருகேமாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 3 பள்ளிகளை சேர்ந்த 372 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கல்வித் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பல்வேறு அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக் கல்வித்துறையில் புதிய புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். முதல்-அமைச்சர் மாணவ மாணவிகளின் வீட்டுக்கு அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்றைய தினம் மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக அதிக அளவில் மங்களபுரம் பள்ளி மாணவ மாணவிகள் மாநில மாவட்ட அளவில் வெற்றி பெற்று பரிசுகளை வென்று உள்ளார்கள். மாணவ மாணவிகள் இது போன்ற பல்வேறு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக கல்வி பயில வேண்டும். சமூகத்தில் நல்ல நிலையை அடைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் குமரேசன், மங்களபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கவுசல்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீ கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.