ஒரு ரூபாய் கொடுத்தால் 5 ரூபாய் கிடைக்கும் என்று கூறி மோசடி: குமரி லாட்ஜில் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்திய கும்பல் சிக்கியது;ரூ.11 லட்சத்துடன் இருந்த 35 பேர் சுற்றிவளைப்பு


ஒரு ரூபாய் கொடுத்தால் 5 ரூபாய் கிடைக்கும் என்று கூறி மோசடி: குமரி லாட்ஜில் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்திய கும்பல் சிக்கியது;ரூ.11 லட்சத்துடன் இருந்த 35 பேர் சுற்றிவளைப்பு
x

ஒரு ரூபாய் கொடுத்தால் 3 மாதங்களில் 5 ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி குமரி லாட்ஜில் ரகசிய கூட்டம் நடத்திய மோசடி கும்பல் போலீசிடம் சிக்கியது. ரூ.11 லட்சத்துடன் இருந்த 35 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஒரு ரூபாய் கொடுத்தால் 3 மாதங்களில் 5 ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி குமரி லாட்ஜில் ரகசிய கூட்டம் நடத்திய மோசடி கும்பல் போலீசிடம் சிக்கியது. ரூ.11 லட்சத்துடன் இருந்த 35 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாட்ஜில் குவிந்த கும்பல்

உலகபுகழ் பெற்ற கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரி எப்போதும் பரபரப்பாகவே காட்சி அளிக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வழக்கத்தை விட அதிகப்படியான நபர்கள் வந்திருந்தனர். வேறு வேறு மாவட்ட பதிவெண் கொண்ட கார்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வந்து இறங்கினர். வெளி மாநில பெண்களின் நடமாட்டமும் அங்கு இருந்துள்ளது. இதை கவனித்துக்கொண்டு இருந்த அக்கம் பக்கத்தினர் சற்று சந்தேகம் அடைந்து அதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது பணம் முதலீடு செய்வது தொடர்பாக லாட்ஜில் ஏராளமானவர்கள் கூடியது தெரியவந்தது. எனவே இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அப்போது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான பதில்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இது போலீசாரின் சந்தேகத்தை வலுவடைய செய்தது. அனைவரும் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வந்ததால் அனைவரையும் பிடித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு ஒவ்வொருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

35 பேர் சிக்கினர்

அதாவது பிடிபட்ட அனைவருமே பெரிய மோசடி கும்பலை நம்பி கன்னியாகுமரி வந்தது தெரியவந்தது. ஒரு ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்தது அந்த காலம். ஆனால் தற்போது பிடிபட்ட கும்பலோ, ஒரு ரூபாய் கொடுத்தால் 3 மாதங்கள் கழித்து 5 ரூபாயாக திருப்பிக்கொடுப்போம் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளது தெரியவந்தது. இதை நம்பி தேனீக்கள் போல பலரும் அந்த மோசடி கும்பலை தேடி கன்னியாகுமரி வந்துள்ளனர். பின்னர் லாட்ஜில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஆனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அனைவரும் போலீசிடம் சிக்கி இருக்கிறார்கள். லாட்ஜில் மொத்தம் 35 போ் பிடிப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை, கோவை, தேனி, கேரள மாநிலம் கொல்லம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் மோசடி கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. எனவே மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் யார், யார்? பணம் முதலீடு செய்ய வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவரங்கள் சேகரிப்பு

இதற்கிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரின் ஏற்பாட்டில் தான் இந்த ரகசிய கூட்டம் நடந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

"கன்னியாகுமரி லாட்ஜில் பிடிபட்ட அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை 3 மாதங்களில் 5 மடங்காக உயர்த்தி கொடுப்பதாக மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி பலரும் முதலீடு செய்யுள்ளனர். 10 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே முதலீடு செய்தவர்களின் விவரங்கள் மற்றும் மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது."

இவ்வாறு அந்த அதிகாரி கள் கூறினர்.

32 செல்போன்கள் பறிமுதல்

முன்னதாக லாட்ஜில் நடத்திய சோதனையில் ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்து 810 ரொக்கம், 32 செல்போன்கள், 2 லேப்-டாப்கள், 2 கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்கள் மற்றும் லேப் டாப்பில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு வருகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி லாட்ஜில் பெரிய மோசடி கும்பல் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story