திருட்டு வாகனங்களை இணையதளம் மூலம் விற்கும் கும்பல்; 3 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்


திருட்டு வாகனங்களை இணையதளம் மூலம் விற்கும் கும்பல்; 3 பேர் கைது-பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 2 Sept 2023 2:30 AM IST (Updated: 2 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வாகனங்களை இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு விற்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

திருட்டு வாகனங்களை இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு விற்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கார் விற்பனை

தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 37). இவர் கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புசெல்வம் என்பவர் தனியார் இணையதளத்தில் குறைந்த விலையில் கார் ஒன்று விற்பனைக்காக உள்ளது என்று பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த மதன்ராஜ், அன்புசெல்வத்துக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காரை வாங்குவதற்கு பேரம் பேசினார். அப்போது அன்புசெல்வம், அந்த கார் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ளது என்றும், அங்கு தனது நண்பர்களான மதுரை கோச்சடையை சேர்ந்த முருகன், கொடிக்குளத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து காரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதையடுத்து மதன்ராஜ் கடந்த மாதம் 11-ந்தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டிக்கு சென்று, அன்புசெல்வத்தின் நண்பர்கள் முருகன், ஆனந்த் ஆகியோரிடம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்தை கொடுத்து காரை வாங்கி சென்றார். பின்னர் அந்த காரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

மோசடி

இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி கேரள போலீசார் விக்னேசின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மதன்ராஜிடம் இருந்து வாங்கிய கார், திருட்டு வழக்கில் இருப்பதாக கூறியதுடன், அந்த காரை கேரள போலீசார் எடுத்து சென்றனர். இதையடுத்து விக்னேஷ், மதன்ராஜிடம் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். அப்போது தான் அந்த கார் திருட்டு வாகனம் என்பதும், அன்புசெல்வம் மோசடி செய்துவிட்டதும் மதன்ராஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்து மதன்ராஜ் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த விவசாயியான அயோத்திராமன் (43) கடந்த ஏப்ரல் மாதம் தனியார் இணையதளத்தில் டிராக்டர் ஒன்று விற்பனைக்காக உள்ளது என்ற பதிவை பார்த்தார். அந்த பதிவையும் அன்புசெல்வமே பதிவிட்டிருந்தார். அப்போது அயோத்திராமன், அன்புசெல்வத்தை தொடர்பு கொண்டு டிராக்டரை வாங்க பேரம் பேசினார். அப்போது அவர், ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டி அருகே வந்து பணத்தை கொடுத்து டிராக்டரை வாங்கி கொள்ளுமாறு கூறினார். அதன்படி, அயோத்திராமன் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை அன்புசெல்வத்திடம் கொடுத்து டிராக்டரை வாங்கி சென்றார்.

கடந்த ஜூன் மாதம் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள், அயோத்திராமனின் வீட்டிற்கு சென்று, அவர் வாங்கிய டிராக்டரின் எண்ணில் வேறொரு டிராக்டர் இருப்பதாக கூறினர். மேலும் அது திருட்டு டிராக்டர் என தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள், அந்த வாகனத்தை எடுத்து சென்றனர். இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அயோத்திராமனும், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

3 பேர் கைது

இந்த 2 புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு வாகனங்களை இணையதளம் மூலம் விற்று மோசடி செய்த அன்புசெல்வம், முருகன், ஆனந்த் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்புசெல்வம் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம், இணையதளம் மூலம் இதுபோன்று திருட்டு வாகனங்களை விற்று வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளார்களா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? திருட்டு வாகனங்களை விற்று மோசடி செய்ய கும்பலாக செயல்படுகிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story