தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் நகையை பறித்த கும்பல்
செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மயக்க மருந்து தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன முறையில் 7 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு பெண் உள்பட 3 பேர் தப்பி உள்ளனர்.
செங்கம்
செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மயக்க மருந்து தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன முறையில் 7 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு பெண் உள்பட 3 பேர் தப்பி உள்ளனர்.
துக்கம் விசாரிப்பதுபோல்...
கலசபாக்கம் அருகே சிறுக்களாம்பாடி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர்தனபால் என்பவர் வீட்டில் அவரது மனைவி பூங்குழலி நேற்று முன்தினம் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த பெண் உள்பட 4 பேர் பூப்பறிப்பதாக கூறி நோட்டமிட்டனர்.
பின்னர் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பூங்குழலியிடம் அவரது கணவர் தனபால் இறந்ததை துக்கம் விசாரிப்பதாக கூறி கதறி அழுவதுபோல் நடித்து 13 பவுன் நகையை திருடிக்கொண்டு காரில் பெண் உள்பட 4 பேர் தப்பினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று வேறு ஒரு சம்பவத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 7 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு பெண் உள்பட 3 பேர் தப்பியுள்ளனர். அது குறித்த விவரம் வருமாறு:-
செங்கம் நகரில் மேலப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சென்னம்மாள் (வயது 70).
நேற்று சென்னம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கார் ஒன்று அங்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்்கிய பெண் உள்பட 3 பேர், வீட்டிற்குள் சென்றனர்.
அவர்கள் சென்னம்மாளிடம், உங்கள் கணவர் பாலகிருஷ்ணனிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். அதனை தர வந்துள்ளதாக கூறி ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளனர்.
அதனை வாங்கிய சென்னம்மாள் மயக்கம் அடைந்தார். சிறிது நேரம் மயங்கிய நிலையில் இருந்ததபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பி விட்டனர்.
இது குறித்து செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையடித்து தப்பிய கும்பல் ரூபாய் நோட்டில் மயக்க மருந்தை தடவி சென்னம்மாளிடம் கொடுத்து அவரை மயக்கம் அடைய செய்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
தொடர் சம்பவம்
ஏற்கனவே செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடம் உறவினர் என்று கூறிக்கொண்டு புகுந்த பெண் நலம் விசாரிப்பதுபோல் 8 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பினார்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்களுடன் காரில் வந்து தனியாக வசிக்கும் பெண்கள் உள்ள வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை இந்த கும்பல் வழக்கமாக வைத்துள்ளது. இதில் ஈடுபட்ட பெண் அரூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதால் செங்கம், கலசபாக்கம் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.