கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும்
கடல்நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கடல்நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆறு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கிராமம் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. விவசாயத்தை நம்பியே இங்கு உள்ள கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் ஆறு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆறு, பழையாறு துறைமுகத்தையொட்டி வங்கக்கடலில் கலந்து வருகிறது.
வற்றாத ஜீவ நதியாக காலம் காலமாக கொள்ளிடம் ஆறு இருந்து வந்தது. இந்த தண்ணீரை ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் கிராம மக்கள் குடிக்கவும் பயன்படுத்தியும் வந்தனர். மேலும் கால்நடைகளும் இந்த தண்ணீரையே குடித்து உயிர் வாழ்ந்து வந்தன.
உட்புகும் கடல்நீர்
வறட்சி காலத்தை பயன்படுத்தி கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் குவாரி அமைத்து தொடர்ந்து 15 ஆண்டுகளாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்ததால் ஆற்றில் பள்ளங்கள் ஏற்பட்டது. இதனால் கடல் நீர் கொள்ளிடம் ஆற்றில் 25 கிலோ மீட்டருக்கு உள்ளே புகுந்து வருகிறது.
ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி உள்ளது. ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் நிலத்தடி நீரை குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆற்றில் கடல் நீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளைநிலங்கள் பாதிப்பு
கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயியான பூபதி கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் தொடர்ந்து புகுந்து வருவதால் ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சந்தப்படுகை, திட்டுபடுகை, நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, நாணல்படுகை, சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூர் உள்ளிட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், வாழை உள்ளிட்ட தோட்ட பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தன.
தற்போது தோட்ட பயிர் சாகுபடி குறைந்து விட்டது. இதற்கு கொள்ளிடம் ஆற்று தண்ணீர் உப்புநீராக மாறியதே காரணமாகும். விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் கலப்பதை தடுக்கவும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும் என்றார்.
கதவணை கட்ட வேண்டும்
சென்னியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில் பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் சோதனை சாவடியை அடுத்த ெரயில்வே பாலம் அருகே கதவணை கட்ட அந்த பகுதியில் மண்ணை எடுத்து ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு ரூ.100 கோடியில் கதவணை கட்ட மதிப்பீடு தயார் செய்தனர். கதவனை விரைவில் கட்டும் பணி தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இதுவரை ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து உப்பு நீர் ஆற்றுக்குள் புகுந்து வருகிறது. விளைநிலங்கள் உவர் நிலங்களாகவும், நிலத்தடி நீரும் உப்பு நீராகவே மாறி வருகின்றன. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.