விளாத்திகுளத்தில் முகவர்கள் கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
விளாத்திகுளத்தில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.
எட்டயபுரம்:
தி.மு.க சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் கூட்டம் ஜீ.வி திருமண மண்டபத்தில் நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார் விளாத்திகுளம் நகர தி.மு.க செயலாளர் வேலுச்சாமி, நெசவாளர் அணி மாநில துணை செயலர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
அவர் பேசுகையில், "தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி நடைபெறும் பாக முகவர்கள் என்பது தேர்தல் களத்தில் தங்களது பகுதியில் பணியாற்றக்கூடிய கட்சியின் ஆனிவேராக இருப்பவர்கள் நீங்கள் தான். உங்கள் பகுதியில் யார் குடியிருக்கிறார்கள், யார் வெளியூர் சென்றிருக்கிறார்கள், யார் இறந்துள்ளனர். என்ற புள்ளி விவரங்கள் உங்களுக்கு தான் தெரியும். தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் என ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அக்டோபர் 17-ல் வெளியிடப்படும் தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலை பெற்று உடனடியாக அந்த பணியை செய்திட வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்களை கண்டறிந்து புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு உதவி செய்ய வேண்டும். அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறி தி.மு.க.விற்கு அதிக வாக்குகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.