ஏரல் அருேக குளத்தில் மூழ்கி சிறுமி, இளம்பெண் பரிதாபமாக பலியாகினர்


தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருேக குளத்தில் மூழ்கி சிறுமி-இளம்பெண் பரிதாபமாக பலியாகினர். தாயாரின் துக்க நிகழ்ச்சி அன்று உறவின சிறுமியுடன் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருேக குளத்தில் மூழ்கி சிறுமி-இளம்பெண் பரிதாபமாக பலியாகினர். தாயாரின் துக்க நிகழ்ச்சி அன்று உறவின சிறுமியுடன் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துக்க நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை நயினார்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை வடிவு (எ) தேவராஜ். இவருக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி ஆகிய 3 மகள்கள்.

கடந்த வாரம் தேவராஜ் மனைவி சண்முகத்தாய் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். நேற்று முன்தினம் தேவராஜ் வீட்டில் மனைவி இறந்த துக்ககாரியம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் வந்துள்ளனர். இதை அடுத்து துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் உறவினர்கள் நேற்று காலையில் சிவகளை சிவகளை பெரியகுளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இதில் தேவராஜூவின் மூத்த மகள் சுடலைக்கனியும் (வயது 21) உறவினர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்துள்ளார்.

உறவின சிறுமி

இந்த நிலையில் அவர்களது வீட்டுக்கு வந்திருந்த உறவினரான ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்த குரூஸ் மகள் கோகிலாவும் (12) குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அவர் திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக சுடலைகனி அவரை நோக்கி தண்ணீரில் நீந்தி சென்றுள்ளார். அவரை தொடர்ந்து உறவினர்கள் சிலரும் சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

கோகிலாவை மீட்க சுடலைக்கனி முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுடலைக்கனியும், கோகிலாவும் குளத்து தண்ணீரிலிருந்த சகதியில் சிக்கி அலறியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்றுவதற்கு முயன்றுள்ளனர். இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதில் உறவினர்கள் சுடலைக்கனியை மயங்கிய நிலையில் குளத்திலிருந்து மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

குளத்து தண்ணீரில் மூழ்கிய கோகிலாவை உறவினர்கள் நீண்டநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் குளத்துக்கு சென்று அரை மணி நேரம் தேடிய நிலையில், கோகிலாவை பிணமாக மீட்டனர். தகவல் அறிந்த ஏரல் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் சோகம்

இறந்த தாயாரின் துக்க நிகழ்ச்சி அன்று உறவின சிறுமியுடன் இளம்பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story