9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது
போளூர் தாலுகாவில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திருமண ஆசைவார்த்தை கூறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
போளூர் தாலுகாவில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து திருமண ஆசைவார்த்தை கூறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
9-ம் வகுப்பு மாணவி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் 17 வயதான வாலிபர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை காண்பித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார்.
ஆனால் மாணவிக்கு தான் கர்ப்பம் அடைந்தது தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று மாணவி தனக்கு வயிற்றுவலி இருப்பதாக பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பெண் குழந்தை பிறந்தது
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமானது தெரிந்தது. இதையடுத்து மாணவியை பிரசவ வார்டில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கவியரசன் முன் வாலிபரை ஆஜர்படுத்தினர். அந்த வாலிபரை செஞ்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.