உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு வாரத்தில் பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை
உசிலம்பட்டி அருகே பிறந்த ஒரு வாரத்தில் பெண் குழந்தை திடீர் இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தபாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இந்தநிலையில் காளீஸ்வரிக்கு கடந்த 3-ந் தேதி உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து காளீஸ்வரி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தையை பார்த்தபோது குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு வந்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உத்தப்பநாயக்கனூர் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெண்சிசு கொலையா? என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.