திருமணம் செய்வதற்காக சிறுமி காரில் கடத்தல்; வாலிபர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


திருமணம் செய்வதற்காக சிறுமி காரில் கடத்தல்; வாலிபர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x

நத்தம் அருகே திருமணம் செய்வதற்காக சிறுமியை காரில் கடத்திய வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியை, அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் சிறுமியை கண்டுபிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். அப்போது கரூர் மாவட்டம் கம்பிளியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை அவரது உறவினரான பொன்ராஜ் (30) என்பவர் திருமணம் செய்வதற்காக காரில் கரூருக்கு சென்றது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு சிறுமியின் அக்காள் கணவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. ஆனால் சிறுமிக்கு திருமணம் நடப்பதற்கு முன்பே போலீசார் அவரை மீட்டனர்.

இதையடுத்து சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பொன்ராஜின் உறவினர் ராமசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பொன்ராஜ், சிறுமியின் அக்காள் கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமியை கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story