தூத்துக்குடியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு கலெக்டருக்கு ராக்கி கட்டிய சிறுமி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு சிறுமி ஒருவர் ராக்கி கட்டி வாழ்த்து பெற்றார்.
விடுதி காப்பாளர்களுக்கு கேடயம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 352 பேர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 வழங்குவதற்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2021-22-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 காப்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தினவிழா
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு கலெக்டர் செந்தில்ராஜ் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். குழந்தைகள் கலெக்டருக்கு ரோஜாப்பூ வழங்கியும், சிறுமி ஒருவர் ராக்கி கட்டியும் வாழ்த்து பெற்றனர்.