வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி மாணவி பலி


வேடசந்தூர் அருகே குட்டையில் மூழ்கி மாணவி பலி
x
தினத்தந்தி 19 Sept 2023 3:00 AM IST (Updated: 19 Sept 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே, குட்டையில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி பலியானார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே, குட்டையில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி பலியானார்.

8-ம் வகுப்பு மாணவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி. அவருடைய மனைவி தெய்வானை. இந்த தம்பதிக்கு நித்யா (வயது 14), சரண்யா (12) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

வீரமணி தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கருகம்புத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். அங்குள்ள பள்ளியில் நித்யா 8-ம் வகுப்பும், சரண்யா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த வாரம் வீரமணி குடும்பத்துடன் பூத்தாம்பட்டிக்கு வந்து தங்கியிருந்தார்.

குட்டையில் விழுந்த மாணவி

கோவில் திருவிழா முடிந்த நிலையில் நேற்று காலை நித்யா, தனது உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள வண்ணம்பாறை என்ற பாறை குட்டைக்கு சென்றார். அங்கு கரையில் நின்றிருந்த நித்யா, திடீரென பாறை வழுக்கி விட்டத்தில் குட்டைக்குள் விழுந்தார்.

நீச்சல் தெரியாத நிலையில் அவர் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் முழ்கினார். இதனை பார்த்ததும் அவருடன் சென்றவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இளைஞர்கள், குட்டையில் குதித்து மாணவியை தேடி பார்த்தனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.

பரிதாப சாவு

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் குட்டையில் இறங்கி மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பிறகு நித்யா பிணமாக மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீசார், நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story