வீட்டை விட்டு வெளியேறிய 10 வயது சிறுமி
ஓமலூர் அருகே பெற்றோர் சித்ரவதை செய்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 10 வயது சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக தாயாரின் காலை பிடித்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்
ஓமலூர் அருகே பெற்றோர் சித்ரவதை செய்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 10 வயது சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக தாயாரின் காலை பிடித்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூடு வைத்து சித்ரவதை
ஓமலூர் அருகே உள்ள நாலுகால்பாலம் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தனது தாய்- தந்தை அடிப்பதாகவும், சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், அதனால் சேலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி பொதுமக்களிடம் ரூ.20 கேட்டுள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அப்ேபாது அந்த சிறுமி முள்ளுசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விமல்-அஞ்சலை ஆகியோரது மகள் துர்கா தேவி (வயது10) என்பதும், தனக்கு 2 வயதில் தங்கை இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் தந்தை விமல் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதால் தாயார் அஞ்சலை கூலி வேலைக்கு சென்று விடுகிறார். இதனால் தான் தங்கையை பார்த்துக்கொள்ள பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருக்கும்படி கூறுகின்றனர். தந்தை விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது கால்களை கட்டி போட்டு அடித்து உதைத்து உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார்.
தாயாரின் காலை பிடித்து கதறல்
தொடர்ந்து அங்கு வந்த ஒரு வேனில் ஏறி அமர்ந்து கொண்டு சேலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் விடும்படி சிறுமி கெஞ்சினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தாயாருடன் செல்ல சிறுமி மறுத்தார். அப்போது வீட்டுக்கு வந்தால் என்னை அடித்து கொன்று விடுவீர்கள். நான் பாட்டி வீட்டிற்கு சென்று அங்கேயே படித்துக் கொள்கிறேன் என கதறி அழுதார். தொடர்ந்து எங்கள் வீட்டுக்கு மட்டும் என்னை அனுப்பி விடாதீர்கள் என பொதுமக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அந்த சிறுமி கதறி அழுதார்.
மேலும் தனது தாயாரின் காலை பிடித்துக்கொண்டு தன்னை விட்டு விடும்படி சிறுமி கதறி அழுதார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சிறுமியை சமரசம் செய்து அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து முள்ளுசெட்டிப்பட்டிக்கு சென்று சிறுமியை சமரசம் செய்து அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.