குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரு ஆடு ரூ.67 ஆயிரத்துக்கு விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.67 ஆயிரத்துக்கு ஒரு ஆடு விற்பனை ஆனது. ஒரே நாளில் ரூ.2½ கோடிக்கு வியாபாரம் நடந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குருபரப்பள்ளி
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.67 ஆயிரத்துக்கு ஒரு ஆடு விற்பனை ஆனது. ஒரே நாளில் ரூ.2½ கோடிக்கு வியாபாரம் நடந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும்ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
ரூ.2½ கோடிக்கு விற்பனை
வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை ஆகும். ஆனால் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விலை போனது. குறைந்த பட்சம் ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.67 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. நேற்று கிடா ஆடுகள் அதிகம் விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், நேற்று ஒரே நாளில் ரூ.2½ கோடி வியாபாரம் நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.