கயத்தாறு அருகே அரசு பஸ்சை சிறைபிடித்துகிராம மக்கள் போராட்டம்
கயத்தாறு அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நிற்காமல் செல்வதை கண்டித்தும், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தும் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிக கட்டணம் வசூல்
கயத்தாறு அருகே உள்ள நாற்கரச் சாலையில் அமைந்துள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திலுள்ள பஸ்நிறுத்தத்தில் இருந்து தினமும் சுற்றுப்புறங்களிலுள்ள ஆறு கிராம மக்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நெல்லை, கோவில்பட்டிக்கு சென்று வருகின்றனர்.
இந்த பஸ் நிறுத்தத்திற்கு நிர்வாகம் அனுமதி வழங்கியும் அதற்கான கட்டணம் தனியாக நிர்ணயம் செய்ய வில்லை. அதை விடுத்து அரசு பஸ்களில் நெல்லையில் இருந்து ராஜாபுதுக்குடிக்கு வரும் பயணிகளிடம் கயத்தாறு வரையிலான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதேபோன்று கோவில்பட்டியில் இருந்து ராஜாபுதுக்குடி வரும் பயணிகளுக்கு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் நிறுதத்திற்கான டிக்கெட் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
இதுகுறித்து பயணிகள் கண்டக்டர்களிடம் விபரம் கேட்டால், முறையாக பதில் கூறாமல் கூடுதல் கட்டணத்தை கறாராக வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பெரும்பாலான ஓட்டுனர்கள் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்துவதில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்பிரச்சினையால் தினமும் இப்பகுதி மக்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி கிராம மக்கள் நெல்லையில் இருந்து வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவ, மாணவிகள் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் உறுதி
இதை தொடர்ந்து நெல்லை கோட்ட அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக ராஜாபுதுக்குடிக்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும், நிறுத்தத்தில் முறையாக அரசு பஸ்களை நின்று செல்ல டிரைவர்களுக்கு உத்தரவிடப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சிறைபிடித்த அரசு பஸ் விடுவிக்கப்பட்டது.