திண்டுக்கல் அருகே விபத்தில் அரசு டிரைவர் பலி
திண்டுக்கல் அருகே விபத்தில் அரசு டிரைவர் பலியானார்.
நத்தத்தை அடுத்த ஏரக்காபட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 52). இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை பிரிவில் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று கோபால்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணிக்கு மேல் திண்டுக்கல் நோக்கி சென்றார். திண்டுக்கல்-நத்தம் சாலையில் நொச்சியோடைப்பட்டி அருகே அவர் சென்றபோது, நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து முருகானந்தம் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.