பொருட்காட்சி பணிக்கு வந்த அரசு ஊழியர் `திடீர்' சாவு
நெல்லையில் பொருட்காட்சி பணிக்கு வந்த அரசு ஊழியர் திடீரென இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 43). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் நெல்லையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக அரங்கு தொடர்பான பணிக்காக வந்தார். இதற்காக அவர் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சக ஊழியரான சரத் என்பவருடன் அறையில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் தூங்கச் சென்றனர். சிறிது நேரத்தில் அன்பழகன் பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதைக்கண்ட சக ஊழியர், விடுதி ஊழியர்கள் உதவியுடன் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.