ரூ.7½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை
பேரணாம்பட்டு நகரில் ரூ.7½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று பார்வையிட்டார்.
பேரணாம்பட்டு நகரில் ரூ.7½ கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று பார்வையிட்டார்.
ரூ.7½ கோடியில் புதிய கட்டிடம்
பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் நெருக்கடியுடன் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்ட மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியாக ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டு ஓங்குப்பம் ரோட்டில் இயங்காமல் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பி.எம்.ஜே.வி.கே. திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ரூ.7 கோடியே 58 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் பகுதிக்கு சென்று பார்வையிட்டு பொதுமக்கள் சென்று வருவதற்காக அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை 2 அடி உட்புறமாக தள்ளி அமைக்கும்படியும், சுற்றுச்சுவரையொட்டி கால்வாய் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பணியாளர் நியமுக்க உத்தரவு
அப்போது அரசு மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் மருந்து வாங்க கூட்டமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த கலெக்டர் மருத்துவ அதிகாரி திருஞானத்திடம் எதற்கு இவ்வளவு கூட்டம் கூடியுள்ளனர் என கேட்டறிந்தார். அதற்கு இரண்டு மருந்தாளுனர் பணியிடத்தில் ஒரு மருந்தாளுனர் மட்டும் இருப்பதாக கூறினார். உடனடியாக கூடுதல் பணியாளர் நியமிக்கும் படி மருத்துவ அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, சப்- கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பிரேமா, துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ், மருத்துவ அதிகாரிகள் திருஞானம், கலைச்செல்வி, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.