நிரந்தர கட்டிடம் இல்லாததால் அடிக்கடி மாற்றப்படும் அவலம்: கழிவறை வசதியின்றி செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி;சப்-கலெக்டர் நேரில் ஆய்வு
கழிவறை வசதியின்றி செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியை சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
தக்கலை,
கழிவறை வசதியின்றி செயல்படும் கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியை சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிரந்தர கட்டிடமின்றி பள்ளிக்கூடம்
பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பழமையான ஓட்டு கட்டிடத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த பள்ளி கட்டிடம் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக அதன் அருகில் இருந்த இன்னொரு பழைய கட்டிடத்திற்கு வகுப்புகள் மாற்றப்பட்டன. இது ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் கூடிய கட்டிடம். கே.ஜி. வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியில் 98 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வகுப்புகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க தலைமை ஆசிரியரோடு சேர்த்து 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் இங்கு கழிவறை வசதியும் கிடையாது.
சப்-கலெக்டர் ஆய்வு
பாதுகாப்பு இல்லாத இந்த கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெற்றோர்கள் தரப்பில் கல்வித்துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த பள்ளி கட்டிடத்தையும் இடிப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை அறிந்த தலைமை ஆசிரியை மேரி ஜெயா இதுகுறித்து மாவட்ட கலெக்டர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ஆகியோரிடம் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இதனையடுத்து நேற்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். தற்போது செயல்பட்டு வரும் கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக மாற்று இடம் வழங்குவதற்கு அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியின் கலை அரங்கு கட்டிடத்தை பார்வையிட்டார்.
மேலும் பள்ளிக்கு நிரந்தரமாக கட்டிடம் கட்டுவதற்கு உகந்த இடம் ஏதும் இருக்கிறதா? என்பதையும் அதிகாரிகளுடன் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின் போது தக்கலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜா ஆறுமுக நயினார், பத்மநாபபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.
பெற்றோர்கள் கோரிக்கை
இந்த பள்ளிக்கு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இனிமேலாவது நிரந்தர கட்டிடம் கட்டி கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.