கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர்
கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர்
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கொடுப்பைக்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 186 மாணவர்கள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளியில் கருங்கற்களால் காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த காம்பவுண்டு சுவர் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் பெய்த மழையில் பள்ளியின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 25 அடி உயரத்தில் இருந்து கருங்கற்களால் கட்டப்பட்ட காம்பவுண்டு சுவருடன் இடிந்து மண் குவியலாக அருகில் உள்ள சாலையில் கிடந்தது. புதிதாக கட்டப்பட்ட பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுவர் இடிந்து விழுந்ததால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
காம்பவுண்டு சுவரை முறையாக கட்டாமல் பெயரளவுக்கு கட்டியதால் சில நாட்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. இதுவே காலையில் இடிந்து விழுந்திருந்தால் மாணவர்கள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி இருப்பார்கள். எனவே, தரமற்ற முறையில் பள்ளி காம்பவுண்டு சுவரை கட்டிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பெற்றோர்கள் கூறினர்.
இதற்கிடையே அரசு பள்ளி காம்பவுண்டு சுவர் இடிந்து விழும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.