வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் தானாக ஓடிய அரசு பஸ்; பள்ளி மாணவர்கள் அலறல்
வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் அரசு பஸ் தானாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலையத்தில் நேற்று காலை 8.30 மணி அளவில் கொடைரோடு செல்லும் அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்தனர். பஸ்சின் டிரைவர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் பஸ் நிலையத்துக்குள் வந்த மற்றொரு பஸ், திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கொடைரோடு செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ் மீது மோதியது. இதில், கொடைரோடு செல்லும் அரசு பஸ் தானாக மெல்ல நகர தொடங்கியது. டிரைவர் இல்லாமல் பஸ் நகருவதை பார்த்த பள்ளி மாணவ-மாணவிகள் அபயகுரல் எழுப்பினர்.
இதனை கேட்ட டிரைவர், விரைந்து வந்து பஸ்சில் ஏறி, பிரேக் போட்டு நிறுத்தினார். அதன்பிறகே மாணவ-மாணவிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். சுமார் 10 அடி தூரத்துக்கு அந்த பஸ் தானாக ஓடியது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பஸ் தானாக நகர்ந்த காட்சிகள், பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.