ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
ரெயில் முன் பாய்ந்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
கரூரில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. காலை 9.18 மணி அளவில் கோட்டை ரெயில் நிலையம் அருகே அந்த ரெயில் மெதுவாக வந்தது. ரெயில் நிலையத்துக்கு முன் 100 மீட்டர் தூரத்தில் ரெயில் வந்தபோது, தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது, அந்த வாலிபரின் உடல் என்ஜினுக்கும், அதன் பின் பொருத்தப்பட்டிருந்த பெட்டிக்கும் இடையே சிக்கி இருந்தது. இதையடுத்து அவர், நிலைய அதிகாரிகள் மூலம் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வேலையில்லாத விரக்தி
விசாரணையில், அந்த வாலிபர் திருச்சி தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த முத்துக்குமாரின் மகன் பிரேம்குமார் (வயது 24) என்பதும், பி.காம். முடித்துள்ள இவர் வேலை இல்லாததால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பயணிகள் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.