விபத்தில் உயிரிழந்த காதலனின் பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பட்டதாரி பெண்


விபத்தில் உயிரிழந்த காதலனின் பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பட்டதாரி பெண்
x

வேளாங்கண்ணி அருகே 10 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த காதலன் திருமணத்துக்கு 1½ மாதத்துக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் காதலனின் பெற்றோருக்கு பட்டதாரி பெண் பணிவிடை செய்து வருகிறார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

வேளாங்கண்ணி அருகே 10 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த காதலன் திருமணத்துக்கு 1½ மாதத்துக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் காதலனின் பெற்றோருக்கு பட்டதாரி பெண் பணிவிடை செய்து வருகிறார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே நடந்து வருகிறது. இது பற்றிய செய்தியை இங்கே பார்ப்போம்!

10 ஆண்டு தீவிர காதல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு வெங்கடேசன், சபரி கிருஷ்ணன்(வயது 26), சந்தோஷ் பாபு ஆகிய 3 மகன்கள். மூத்த மகன் வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து அவர் தனியாக வசித்து வருகிறார்.

இரண்டாவது மகன் சபரிகிருஷ்ணன் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். இவரும், இவரது உறவினருமான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்சி பட்டதாரியுமான 24 வயது நிரம்பிய பெண்ணும் 10 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

திருமணம் நடத்த முடிவு

இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவர இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 20.08.2021 அன்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப்பட்டது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவரின் குடும்பத்தினரும் தீவிரமாக செய்து வந்தனர். 10 ஆண்டுகள் தீவிரமாக காதலித்து வந்த காதலர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதியன்று(07.07.2021) மின் கம்பிகளில் உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணியில் சபரி கிருஷ்ணன் ஈடுபட்டு இருந்தார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விரைவில் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க இருந்த நிலையில் சபரி கிருஷ்ணன் உயிரிழந்தது இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மன உளைச்சல்

இந்த சம்பவத்தால் இருவரின் குடும்பத்தினரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ சபரிகிருஷ்ணனை காதலித்த அந்த பெண்தான். தனது காதலரும், வருங்கால கணவருமான சபரிகிருஷ்ணனின் மரணத்தை தாங்க முடியாமல் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

தனது சோகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலையில் மிகுந்த தவிப்புக்குள்ளான அந்த பெண் தனது காதலனின் நினைவில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வந்தார்.

காதலனின் பெற்றோருக்கு பணிவிடை

பின்னர் ஒரு வழியாக தனது மனதை தேற்றிக்கொண்டு மகனை இழந்து வாடும் தனது காதலனின் பெற்றோருக்கு மருமகளாக இருந்து பணிவிடை செய்வதென அந்த பெண் முடிவு செய்தார்.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் பேசி அவர்களின் அனுமதியைப் பெற்று தனது காதலனின் வீட்டுக்கு வந்தார். அங்கு ஒரு மருமகளாக சபரி கிருஷ்ணனின் பெற்றோருக்கு அந்த பெண் பணிவிடை செய்து வருகிறார்.

தங்கள் மகன் இறந்த பின்னரும் மகனின் காதலி தங்கள் வீட்டில் மருமகளாக வந்து தங்களுக்கு பணிவிடை செய்து வருவதால் மகனின் நினைவில் தாங்கள் மருமகளை பார்த்து வருவதாக சபரி கிருஷ்ணனின் தாயார் பத்மாவதி கண்ணீர் மல்க தெரிவித்தார்.




Next Story