தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை
பட்டுக்கோட்டையில் வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் நரியம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திராணி தனது மகள் மற்றும் மகன் வெங்கடேஸ்வரன் (வயது22) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் வெங்கடேஸ்வரன் பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
சம்பவத்தன்று இரவு சினிமா பார்க்க சென்று விட்டு வெங்கடேஸ்வரன் வீட்டிற்கு நீண்ட நேரம் கழித்து வந்துள்ளார். அப்போது வேலைக்கு செல்லாமல் சினிமாவுக்கு போய்விட்டு ஊர் சுற்றுகிறாயே என்று இந்திராணி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேஸ்வரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதுகுறித்து இந்திராணி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஸ்வரன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.