அரசு பள்ளியில் முப்பெரும் விழா
வேதாரண்யம் அருகே அரசு பள்ளியில் முப்பெரும் விழா
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா, 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்களை வரவேற்கும் விழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரவீந்திரன் வரவேற்றார். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளியில் பயிலும் மாணவர்கள் ரோஜாப்பூ, சந்தனம், இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 5-ம் வகுப்பு படித்துவிட்டு வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி புத்தகத்தை பரிசாக வழங்கினர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சித்திரவேலு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.