பாரம்பரியத்தை பறைசாற்றும் மாலை தாண்டும் பெருவிழா
செம்பட்டி அருகே பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், மாலை தாண்டும் பெருவிழா நடந்தது. மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வேட்டியை தாண்டும் மாடு
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஜெ.புதுக்கோட்டையில் மலைமேடு் என்ற இடம் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 நாட்கள், மாலை தாண்டும் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த விழா, அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மாலை தாண்டும் பெருவிழா என்பது மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து அவைகளை ஓடவிடுவர். அந்த மாடுகள் மீது மஞ்சள் பொடி தூவி, வரவேற்பார்கள்.
மாடுகள் செல்லும் பாதையில் வெள்ளை வேட்டியை தரையில் விரிப்பர். அந்த வேட்டியை தாண்டும் முதல் மாட்டுக்கு சிறப்பு பூஜை செய்வர். பின்னர் மேளதாளத்துடன் அந்த மாட்டை, பொம்மைய சுவாமி மாலை தாத்தையா மலைக்கோவிலுக்கு அழைத்து செல்வர்.
அங்கு அந்த மாட்டுக்கு பூச்சூடி, பொட்டு வைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். அந்த மாடு, கோவில் மாடு (சலகெருது) என்று அழைக்கப்படும். பின்னர், அந்த மாட்டுக்கு எலுமிச்சம் பழம், கரும்பு வழங்கி, அந்த மாட்டை பக்தர்கள் அனைவரும் வணங்கி செல்வர்.
மாடுகளுக்கு பால் பூஜை
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை தாண்டும் பெருவிழா தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் பொங்கல் அழைப்பு நடந்தது. மேலும் பாரம்பரிய முறைப்படி தேவதுந்துமி முழங்க, மங்கல இசையுடன், தேவராட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
2-வது நாளான நேற்று மலைமேடு பகுதியில், ஜெ.புதுக்கோட்டை மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். மேலும் அவர்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் பசு மாடுகளை, லாரிகளில் ஏற்றி கொண்டு திறந்தவெளியில் தங்கினர். மாடுகளுக்கு தேவையான தீவனத்தையும் கொண்டு வந்திருந்தனர்.
மாடுகளுக்கு குங்கும பொட்டு வைத்து சிறப்பு அபிேஷகம் செய்தனர். வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட கன்று குட்டிகள் மற்றும் மாடுகளுக்கு பால் பூஜை செய்து வழிபட்டனர்.
பெண்கள் ஊர்வலம்
பூஜை பொருட்கள் அடங்கிய கூடைகளை தலையில் வைத்து சுமந்தபடி பெண்கள் ஊர்வலமாக எடுத்து செல்லும் விலவ கூடை அழைத்தல் என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து பொதி கல்லை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியத்துக்கு பிறகு மாடுகளின் ஊர்வலம் தொடங்கியது.
ஒரே இடத்தில் ஏராளமான மாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் 2 கன்றுக்குட்டிகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன்பிறகு மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ள மாடுகளை, சுற்றி வந்து மாடுகளுக்கு பரிகாரங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேள, தாளம் முழங்க பக்தி பரவசத்துடன் மாடுகளை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் மேல் சட்டை அணியாமல், தலையில் தலைப்பாகை கட்டியபடி, கம்புகளுடன் மாடுகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் சலகெருது மாட்டை அழைத்து சென்று மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நடந்த இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.