முன்னாள் படைவீரர்கள் கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 14-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலினை இணைத்திடல் வேண்டும்.
தொழில் முனைவோர் கருத்தரங்கு
அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சுயவேலை வாய்ப்பு விவரங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் சுயதொழில் தொடங்கிட தேவையான ஆலோசனைகள் வழங்கிட உள்ளனர்.
எனவே திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் சுயவேலைவாய்ப்பு மூலம் தமது சிவில் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள இந்த அரியவாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.