2 வயது குழந்தையை கடித்து குதறிய குரங்கு கூட்டம்
குடியாத்தம் அருகே 2 வயது குழந்தையை குரங்குகள் கூட்டம் கடித்து குதறியதால், நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் அருகே 2 வயது குழந்தையை குரங்குகள் கூட்டம் கடித்து குதறியதால், நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குரங்குகள் கடித்து குதறியது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா கிராமம் தமிழக-ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளதால் அடிக்கடி யானைகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்தில் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
குரங்குகள் கூட்டமாக வந்து வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும், தின்பண்டங்களை எடுத்துச்சென்று தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றன.
நேற்று முன்தினம் சைனகுண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்தி என்பவருடைய 2 வயது பெண் குழந்தை வீட்டுக்கு வெளியே இருந்த போது கூட்டமாக வந்த குரங்குகள் திடீரென அந்த சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது. இதில் தலை, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாலை மறியல்
குரங்கு கூட்டம் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கும் சம்பவத்தையடுத்து குரங்குகளை அந்தப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என நேற்று மாலையில் திடீரென கார்த்தி தனது உறவினர்கள், கிராம மக்களுடன் சைனகுண்டா வனத்துறை செக் போஸ்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறை சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் நடந்து கொண்டிருந்த போது வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. அப்போது குரங்கு கூட்டம் அந்த வாகனங்கள் மீது ஏறி குதித்தது.
பொதுமக்கள் கோரிக்கை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் குரங்குகள் இரவு வேளைகளில் இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்படுவதால் குரங்குகள் கிராம மக்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்குகிறது. மேலும் பழம், பிஸ்கட் போன்றவை கொண்டு வந்து சைனகுண்டா கிராமம் முதல் ஆந்திர மாநில எல்லை வரை சாலையில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை தருகின்றனர். இதனால் இந்த குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.