தீபத் திருவிழாவில் மக்கள் நண்பர்கள் குழு போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்
தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் மக்கள் நண்பர்கள் குழு போலீசாருடன் இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.ஸ்டீபன் கூறினார்.
தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் மக்கள் நண்பர்கள் குழு போலீசாருடன் இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.ஸ்டீபன் கூறினார்.
கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு (ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள்) ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.ஸ்டீபன் தலைமை தாங்கி பேசியதாவது:-
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோவிலில் சாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாவட்ட காவல்துறையுடன் இந்த பாதுகாப்பு பணியில் உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளடக்கிய திருவண்ணாமலை மாவட்ட ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள் குழுவினரும் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணி
ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள் குழுவை சேர்ந்தவர்களை 10 நாட்கள் சாமி வீதி உலாவிலும், மலை சுற்றும் பாதையிலும், போக்குவரத்து காவல், குற்றதடுப்பு பாதுகாப்பு, இரவு ரோந்து மற்றும் தகவல் தரும் பணிக்கு ஒவ்வொரு குழுக்களாக பிரித்து பாதுகாப்பு பணியில் அமர்த்த உள்ளோம்.
அந்த பணியை உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்திட வேண்டும். மேலும் கொடியேற்றம், வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், பஞ்சமூர்த்திகள் மகாரதம், பரணிதீபம், மகாதீபம் ஆகிய முக்கிய நாட்களில் ஒட்டுமொத்த ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி, திருவண்ணாமலை மாவட்ட ப்ரண்ட்ஸ் ஆப் பீப்பிள் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.