வளர்ப்பு யானைகள் முகாமில் தொங்கும் மின்வேலி அமைப்பு


வளர்ப்பு யானைகள் முகாமில் தொங்கும் மின்வேலி அமைப்பு
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது. இதுதவிர வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை மீட்டு முதுமலை முகாமுக்கு கொண்டு வந்து பராமரித்து கும்கியாக மாற்றப்படுகிறது. தற்போது முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் தெப்பக்காட்டில் 18 யானைகளும், கார்குடி சரகத்துக்கு உட்பட்ட அபயாரண்யம் முகாமில் 10 யானைகளும் உள்ளன.இந்தநிலையில் அபயாரண்யம் முகாமுக்கு நள்ளிரவில் காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து பாகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் மதம் பிடித்த கும்கி யானைகள், காட்டு யானைகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. தொடர்ந்து காட்டு யானைகள் பாகன்கள் குடும்பத்தினர் தங்கும் குடிசைகளையும் சேதப்படுத்தி வருகிறது.

மின்வேலி அமைப்பு

இதனால் முகாமுக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க அபயாரண்யம் முகாம் பகுதியில் 1 கி.மீட்டர் சுற்றளவில் சூரிய மின்சக்தியில் செயல்படும் தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவில் காட்டு யானைகள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக பாகன்கள் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலையில் 2 வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இதில் அபயாரண்யம் முகாமில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. இதனால் இரவில் வளர்ப்பு யானைகளுடன் பாகன்கள், அவர்களது குடும்பத்தினர் தங்கி வந்தனர். மேலும் சில காட்டு யானைகள் முகாமுக்குள் அடிக்கடி நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது.

இதனால் சூரிய மின்சக்தியில் இயங்கும் வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பாகன்கள் வசிக்கும் இடங்களிலும் சூரிய மின் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story