கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கவுன்சிலர் ஒருவர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி கூட்டம்
கரூர் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகராட்சி துணைத்தலைவர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதையடுத்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துக்கூறினர்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பேசுகையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வார்டு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனக்கூறி முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
கூச்சல், குழப்பம்
இதில் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தி.மு.க. அமைச்சரை அவர்கள் தகாத வார்த்தையால் பேசினர். இதனால் அ.தி.மு.க.- தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தி.மு.க. ஆட்சியில் போடாத சாலைக்கு சாலைபோடப்பட்டதாக கூறியுள்ளீர்கள் என கூறினர்.
இதனைதொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில் அ.தி.மு.க. ஆட்சியிலும் போடப்படாத சாலையை போட்டதாக உள்ளது எனக்கூறினர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆதாரம் இருந்தால் தாருங்கள் என கூறினர். இதனால் இருதரப்பினரும் தகாத வார்த்தைகளை பேசியதால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இறைச்சி கழிவுகள்
இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் அ.தி.மு.க. கவுன்சிலரான சுரேசை கூட்டத்திலிருந்து வெளியேற்றினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் இறைச்சி கடைகளுக்கு நேரிடையாக சென்று கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகர் மற்றும் வார்டுகளை குறிக்கும் வகையில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்து பேசினர். கூட்டத்தில், மொத்தம் 137 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.மாநகராட்சி கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.