கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்


கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:22 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கூர் கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என சட்டசபையில் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

தஞ்சாவூர்

மதுக்கூர் கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என சட்டசபையில் அண்ணாதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

கண்ணனாறு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தில் பேசியதாவது:-

மதுக்கூரில் உள்ள மிகப்பெரிய ஆறான கண்ணனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மழைக்காலங்களில் கண்ணனாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் மூழ்கி விடுவதால் தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கக்கூடிய இந்த சாலை துண்டிக்கப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் இரண்டு மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கண்ணனாறு மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

உயர்மட்ட பாலம்

1974 - 75-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை பார்வையிட வந்த அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அப்பகுதி மக்கள் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை அப்போதைய முதல்-அமைச்சர் வந்து பார்வையிட்டார் .அப்போதும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.இந்த கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவது தொடர்பாக துறை சார்பில் திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே கண்ணாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்.

புறவழிச்சாலை

2006 - 2011 -ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பட்டுக்கோட்டையில் இரண்டாம் கட்ட புறவழி சாலை பணிகள் முடிவு பெற்றன. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக மூன்றாம் கட்ட புறவழிச்சாலை அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை.

பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள சாலைகள் மிக குறுகலான சாலைகளாக உள்ளது. வெளியில் இருந்து வருகின்ற வாகனங்கள் நகரத்திற்குள் வர முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த புறவழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடும் நில எடுப்பிற்கான மதிப்பீடும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே பட்டுக்கோட்டை நகருக்கு மூன்றாம் கட்ட சுற்றுச்சாலை திட்டத்தையும் உடனடியாக செய்து தர வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப பூங்கா

மதுக்கூர் பேரூராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் விடுதி தற்போது சிதிலமடைந்துள்ளது. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியர் விடுதியின் இடத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஒரு பயணியர் விடுதி கட்டித் தர வேண்டும்.ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தலா 1 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய மாவட்டமாகும். இங்கு வேற எந்த தொழிற்சாலையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை என்பதால் தஞ்சை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தஞ்சை நகரில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story