அவளூர் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்


அவளூர் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்
x

அவளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பார்வதி ராஜாமணி கோரிக்கை வைத்து உள்ளார்.

ராணிப்பேட்டை



அவளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பார்வதி ராஜாமணி கோரிக்கை வைத்து உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அவளூர் ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ஆர்.பார்வதி ராஜாமணி உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து கூறியதாவது:-

இலவச வீடுகள்

நான் தலைவராக பொறுப்பேற்றதும் முதல் வேலையாக அவளூர் வழியாக நிற்காமல் சென்று வந்த 156, 123 வழித்தட பஸ்கள் அவளூரில் நின்று செல்ல போக்குவரத்து துறையில் கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுத்தேன். தற்போது மேற்கண்ட பஸ்கள் அவளூரில் நின்று செல்கிறது. அவளூர் காலனியில் 30 வருடங்களாக ரேஷன் கடை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் ரேஷன் கடை திறக்கப்பட உள்ளது.

மேலும் அவளூர் ரைஸ்மில் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, ரூ.2 லட்சத்தில் முருங்கை நர்சரி, அவளூர் உராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் சுற்றுச்சுவர் சீரமைப்பு, ரூ.3 லட்சத்தில் பள்ளியின் மேற்கூரை சீரமைப்பு, வண்ணம் பூசுதல், ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நூலகம் சீரமைப்பு, 4 மழைநீர் சேகரிப்பு தொட்டி உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 17 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. அவளூர் உடையார் தெருவில் ரூ.3 லட்சத்திலும், மேட்டுத்தெருவில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலும், முஸ்லிம் சுடுகாட்டிற்கு செல்ல ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், மசூதியில் இருந்து நெடுஞ்சாலைக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலை, ரேஷன் கடை அருகே ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

உயர்மட்ட மேம்பாலம்

ரூ.27 லட்சம் மதிப்பில் அவளூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், பெரிய தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், ரூ.5 லட்சத்தில் சிமெண்டு சாலை, அவளூர் பழைய காலனி பகுதியில் தலா ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, மேட்டு தெருவில் இருந்து எஸ்.எம்.நகர் வரை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் பைப்லைன், மேட்டுக்காலனி ஆலமரம் முதல் தார் சாலை வரை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் பேவர் பிளாக் சாலை, ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் மக்கும், மக்காத குப்பை தொட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் அவளூர் ஊராட்சியில் பகுதி நேர கால்நடை மருத்துவமனை, துணை சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், நெற்களம், தானிய கிடங்கு, சமுதாய கூடம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அவளூரில் இருந்து பள்ளி, தாலுகா அலுவலகம், சுடுகாடு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது அரசு நெடுஞ்சாலையில் நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலை ஒரமாக உள்ள வயல்வெளிகளுக்கு கால்நடைகளை கொண்டு செல்ல நீண்ட தூரம் சென்று வர வேண்டி உள்ளது. ஆகவே நெடுஞ்சாலையில் நடை மேம்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.

பஸ் இயக்க வேண்டும்

காஞ்சீபுரத்தில் இருந்து காவேரிப்பாக்கம் வரை சென்று வந்த டி 40 வழித்தட பஸ் கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நான் தினமும் காலையில் நடைபயிற்சி செல்லும் போது ஒவ்வொரு வார்டிலும் என்ன பிரச்சினை உள்ளது என்பதை அந்தப் பகுதி மக்கள் மூலமாக தெரிந்து கொண்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து விடுவேன். ஊராட்சியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.

பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு அந்த பகுதியில் உடனுக்குடன் புதிய மின்விளக்குகள் பொருத்தபட்டு வருகிறது. இந்திராகாந்தி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் சேதமடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி அந்த பயனாளிகளுக்கு புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அவளூர் ஊராட்சியை உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜி.அரவிந்தன், வார்டு உறுப்பினர்கள் லட்சுமி சங்கர், சரஸ்வதி சங்கர்பிரபு, சோனியா வெங்கடேசன், வி.அசோக்குமார், எஸ்.மணிகண்டன், லலிதா விஜயராகவன், சாந்தா சந்திரசேகர், ஏ.ராஜாவேல் ஆகியோருடன் இணைந்து மாற்றுவேன.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பார்வதி ராஜாமணி தெரிவித்தார்.


Next Story