இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது


இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது
x

காட்பாடி அருகே சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவதி அடைந்தனர்.

வேலூர்

காட்பாடி

காட்பாடி அருகே சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அவதி அடைந்தனர்.

ரெயில் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது

சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே நேற்று மாலை 4.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலை இயங்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரெயில் மீது விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பி விழுந்ததால் மின்சாரம் தானாக துண்டிக்கப்பட்டது. இதனால் ரெயில் சேவூரிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அச்சத்தில் பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி ஓடினர். நடு வழியில் ரெயில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சரிசெய்தனர்

இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே அதிகாரிகளுக்கும், என்ஜினீயர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 15 பேர் கொண்ட என்ஜினீயர் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு மின் கம்பி சரிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 1½ மணிநேரம் தாமதமாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையை நோக்கி புறப்பட்டு சென்றது.

ரெயில்கள் தாமதம்

சேவூர் பகுதியில் திடீரென உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பின்னால் இயக்கப்படும் திருவனந்தபுரம், லால் பாக், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். மின் கம்பி சரி செய்யப்பட்ட பிறகு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலைத் தொடர்ந்து மற்ற ரெயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.


Next Story