வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்
வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் விபத்து, தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்கொலை மரணங்களை தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது போல, சாணி பவுடருக்கும் விரைவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான சுற்றறிக்கை அரசின் பல துறைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலைகளை தடுக்கும் வகையில் 'மனம்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
மனம் திட்டம்
6 மாதங்களுக்கு பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வித் துறையோடு இணைந்து அரசு கலை கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் போன்றவற்றிலும் கொண்டுவரப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யிலும் மனம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் தற்கொலையால் ஏற்படும் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் மரணங்கள், இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை அரசுக்கு தந்திருக்கிறார்கள். இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, தற்கொலைகளை தடுக்கும் திட்டத்துக்கு இந்த அறிக்கை பேருதவியாக இருக்கும்.
பள்ளிகளுக்கு விடுமுறையா?
தினந்தோறும் வைரஸ் காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடமாடும் வாகனங்கள் மூலமும் முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி என்ற நிலை எதுவும் இல்லை. 3 முதல் 4 நாட்கள் உடல், தொண்டை வலி இருக்கும்.
இதை பெரிய அளவில் சொல்லி மக்களை பதற்றப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டாம். இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விட வேண்டிய நிலை இல்லை. அதற்கான பாதிப்பும் இங்கு இல்லை.
தற்கொலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. விலை மதிக்க முடியாத உயிர் போவதை ஏற்க முடியாது. தற்கொலை தீர்வு அல்ல. பிறந்துவிட்ட பிறகு வாழ்ந்துதான் தீரவேண்டும். அது எப்படி வாழ வேண்டும் என்பது நம் கையில் இருக்கிறது. 100 சதவீதம் தவிர்க்கப்பட வேண்டிய செயல் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரிய சவால்
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை சம்பவம் குறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது, 'கொரோனா காலத்தில் சமூகத்துடன் இருப்பது குறைந்து போனது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையிலும் பலர் தனிமையையே விரும்புகிறார்கள். அவர்களை சமூகத்தில் பழக வைப்பது பெரிய சவாலாக இருக்கிறது. தனிமையில் இருப்பதால், அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதிலும் பிரச்சினை உள்ளது. பேராசிரியர்கள்-மாணவர்கள் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது. 85 முதல் 90 சதவீதம் மாணவர்கள் பேராசிரியர்களை வாரத்துக்கு ஒருமுறை சென்று சந்தித்து பேசுகிறார்கள்' என்று பதில் அளித்தார்.