நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் 2 கைகளும் துண்டானது


நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் 2 கைகளும் துண்டானது
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடிகுண்டு வெடித்து பிரபல ரவுடியின் 2 கைகளும் துண்டானது. இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை அருகே வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடிகுண்டு வெடித்து பிரபல ரவுடியின் 2 கைகளும் துண்டானது. இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

நாட்டு வெடிகுண்டு வெடித்தது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகன் கலைவாணன் (வயது 40). இவர்மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் பின்புறம் பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தி நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் கலைவாணனின் 2 கைகளும் மணிக்கட்டுடன் சேர்ந்து துண்டானது. மேலும் அவரது மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சை

கலைவாணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டு வெடிகுண்டு வெடித்தது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் பண்டாரவாடை கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

சோதனை

மேலும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். நாகை, திருவாரூரில் இருந்து மோப்பநாய்கள் சம்பவ இடத்துக்கு வரவழைகப்பட்டன.

அங்கிருந்து .வெடிக்காத சணல் வெடி குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் நூற்றுக்கணக்கான மூலப்பொருட்கள்

கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு வெடித்த வீட்டை போலீசார் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள்

மேலும் தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மூலப்பொருட்களில் பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரணை நடத்தினார். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு அது வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story