ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்


ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரை ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்
x

ரூ.3 கோடிக்கு விலை பேசப்படும் குதிரையுடன் ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்

ஈரோடு

அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையான அந்தியூர் குதிரை சந்தை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சந்தைக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் எம்.எஸ்.ஆர்.ஐ. குதிரை பண்ணை வைத்து நடத்தி வரும் எம்.சி.ஸ்ரீநிவாஸ் என்பவர் 65 அங்குல உயரம் உள்ள பஞ்ச கல்யாணி கருப்பு நிற சாகர் என பெயரிடப்பட்ட மார்வார் இன குதிரையை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'குஜராத், ராஜஸ்தான் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் நடந்த குதிரை கண்காட்சியில் இந்த குதிரை 10-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று உள்ளது. இந்த பரிசுகள் குதிரையின் பிறப்பு, அம்சம், சுழி, காது, நிறம், அதன் இனம், உயரம் ஆகியவற்றை வைத்து வழங்கப்படுகின்றன. இந்த குதிரை ரூ.3 கோடி வரை விலை பேசி உள்ளேன். ஒரு சிலர் இந்த குதிரையை பார்த்து ரூ.2 கோடி முதல் ரூ.2½ கோடி வரை கேட்டு உள்ளனர்.

இந்த குதிரை மட்டுமின்றி எனது பண்ணையில் 9 குதிரைகளை வளர்த்து வருகிறேன். குதிரைகளை இனப்பெருக்கத்துக்காக வளர்க்கிறேன். ஏற்கனவே குதிரைகளை ரூ.5 லட்சம் முதல் ரூ.4 கோடி வரை விற்பனை செய்து உள்ளேன். தினமும் குதிரைக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சவாரி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குதிரைக்கு தேவையான கால்சியம் சத்து கொண்ட உணவு வகைகள் கால்நடை டாக்டர் உதவியுடன் அளிக்கப்பட்டு பராமரித்து வருகிறேன். ரூ.3 கோடி வரை விலை பேசப்படுவதால் சந்தைக்கு வரும் ஏராளமான பொதுமக்கள் அதனுடன் செல்பி எடுத்து செல்கின்றனர்,' என்றார்.


Next Story