வீடு, 10 கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசம்


வீடு, 10 கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
x

பழனி அருகே வீடு, 10 கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

திண்டுக்கல்

கடைகளில் தீ

பழனி அருகே நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் பிரசித்திபெற்ற மண்டு காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி கோவில் அருகில் குடிசைகளால் ஆன 10-க்கும் மேற்பட்ட தேங்காய், பழம், பூ விற்பனை கடைகள் உள்ளன.

இந்தநிலையில் நேற்று மதியம் அங்குள்ள கடைகளில் திடீரென்று தீப்பற்றியது. ஒரு கடையில் பற்றிய எரிய தொடங்கிய தீ, அடுத்தடுத்து கடைகள் மீது பற்றியது. மேலும் அருகில் இருந்து காளியம்மாள் என்பவரது வீட்டின் மீதும் தீப்பரவியது. இதனை பார்த்த கடைக்காரர்கள், தங்களது கடைகளை விட்டு வெளியே ஓடி உயிர் தப்பினர். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடைக்காரர்கள், தங்களது கடைகள் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் பலத்த காற்று வீசியதாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

எரிந்து நாசம்

உடனே இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கடைகளில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

இருப்பினும் தீவிபத்தில் 10 கடைகள், காளியம்மாளின் வீடு, மோட்டார் சைக்கிள் ஒன்று ஆகியவை எரிந்து நாசமானது. மேலும் தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story