5 வருடத்திற்கு முன்பு பழங்குடியினருக்கு கட்டப்பட்ட வீடு இடிந்து தரைமட்டம்


5 வருடத்திற்கு முன்பு பழங்குடியினருக்கு கட்டப்பட்ட வீடு இடிந்து தரைமட்டம்
x

கலவை அருகே 5 வருடங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு கட்டப்பட்ட வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் உயிர்த்தப்பினர்.

ராணிப்பேட்டை

கலவை அருகே 5 வருடங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு கட்டப்பட்ட வீடு இடிந்து தரைமட்டமானது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் உயிர்த்தப்பினர்.

பழங்குடியினருக்கு வீடு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அத்தியானம் கிராமத்தில் 2017-ம் ஆண்டு பழங்குடியினருக்கு 10 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும். இங்குள்ள ஒரு வீட்டில் அஜித் (வயது 31) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அஜித், (31), அவரது மனைவி செல்வி (25), 4 வயது கைக்குழந்தை மற்றும் அஜித்தின் தம்பி சூர்யா (14) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் அஜித் வீடு திடீரென இடிந்து விழுந்தது.

இடிந்து தரைமட்டம்

வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அருகே இருந்த பவுன் என்பவர் சென்று அவர்களை மீட்டார். வீடு இடிந்து விழுந்ததில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

நடவடிக்கை

இங்கு 18 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். வீடுகள் கட்டியவர்கள் தூண் அமைக்கவில்லை. பேஸ்மட்டமும் போடாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கட்டிட காண்டிராக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீதி உள்ள வீடுகளையும் இடித்துவிட்டு வேறு வீடுகள் கட்டித் தரப்படும். அதுவரை தற்காலிகமாக அருகே உள்ள பண்ணையில் தங்கவைக்கப்படுவார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட அஜித் குடும்பத்திற்கு அரிசி, உணவு, பாய் உள்ளிட்டவற்றை கலெக்டர் வழங்கினார். கலவை தாசில்தார் சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, பொறியாளர் தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபால், குமாரி கலைமணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குப்பன், அமரேசன், கிராம நிர்வாக அதிகாரிகள் கீதா, வினோத் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story