திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட கலெக்டர் அலுவலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கலெக்டர் அலுவலகம்
திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு வழங்குகிறார்.
இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு திருப்பத்தூர் மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான மாதனூரில் அவருக்கு அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், நல்லதம்பி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து ஆம்பூர் அருகே உள்ள மொஹிப் ஷூ கம்பெனியில் உள்ள விடுதிக்கு வந்தார்.
காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகிறார். அங்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குத்துவிளக்கு ஏற்றியும், கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்று பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார்.
வண்ண விளக்குகள்
திறப்பு விழாவையொட்டி கலெக்டர் அலுவலகம் வண்ண மின்விளக்குகள் அலங்காரத்தால் ஜொலிக்கிறது. இதனிடையே நேற்று மாலை அமைச்சர் எ.வ.வேலு விழா நடக்கும் மைதானத்திற்கு வருகை தந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.