ஜமாத் தலைவருக்கு கூரியர் பார்சலில் வந்த மனித மண்டை ஓடு
ஜமாத் தலைவருக்கு கூரியர் பார்சலில் வந்த மனித மண்டை ஓடு
திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு கூரியர் பார்சலில் மனித மண்டை ஓடு வந்தது. அதை அனுப்பியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஜமாத் தலைவருக்கு வந்த பார்சல்
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். இவர் ஜமாத் தலைவர் ஆவார். இவருக்கு கடந்த 3-ந்தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப்பெட்டியில் இருந்தது. அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்து விட்டார்.
இந்த நிலையில் அந்த பார்சலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதையடுத்து நேற்று காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார். தந்தை கூறியதன் பேரில் முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அட்டைப்பெட்டியில் மண்டை ஓடு
அந்த அட்டைப்பெட்டியில் மனித மண்டை ஓடு இருந்தது. உடனே அவர் தனது தந்தையை அழைத்து மண்டை ஓடு இருப்பதை தெரிவித்தார். இதுகுறித்து திருவையாறு போலீசில் முகமதுகாசிம் புகார் செய்தார்.
அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டை ஓடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அனுப்பியது யார்? போலீசார் விசாரணை
மேலும் அட்டைப்பெட்டியில் அந்த பார்சலை அனுப்பியவர் நவ்மன்பாய்கான் என்றும், ஒரு செல்போன் எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் மண்டை ஓடு பார்சலை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள்?.
முகமது காசிமை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பினார்களா? அல்லது இதற்கு வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
ஜமாத் தலைவருக்கு மனித மண்டை ஓடு பார்சல் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.