மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் கள்ளக்காதலியுடன் சமயபுரத்தில் பிடிபட்டார்
மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் கள்ளக்காதலியுடன் சமயபுரத்தில் பிடிபட்டார்
திண்டுக்கல் அருகே உள்ள பூத்தாம்பட்டி ஏ.பி. காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராஜசேகர் (வயது 32). கொத்தனாரான இவருக்கு தேவி (30) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் ராஜசேகருக்கும், அப்பகுதியை சேர்ந்த சரோஜாதேவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து, ராஜசேகர் தனது வீட்டிற்கு வராமல் அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜசேகருக்கும், அவரது மனைவி தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், உனது மனைவி உயிரோடு இருக்கும் வரை நாம் நிம்மதியாக இருக்க முடியாது என்று சரோஜாதேவி, ராஜசேகரிடம் கூறியுள்ளார். கள்ளக்காதலியின் பேச்சில் மயங்கிய ராஜசேகர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் இரவு தனது 3 மகன்களையும் தனது வீட்டருகே உள்ள மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து வீட்டுக்குவந்த ராஜசேகர் தனது மனைவி தேவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இந்த கொலை குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் சமயபுரம் கடைவீதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர், சரோஜாதேவி என தெரியவந்தது. மேலும் விசாரணையில் ராஜசேகர், திண்டுக்கல்லில் மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கள்ளக்காதலியுடன் சமயபுரம் வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சமயபுரம் போலீசார் இருவரையும் பிடித்து திண்டுக்கல் போலீசில் ஒப்படைத்தனர்.