மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு தொழிலாளி தற்கொலை
கூடங்குளத்தில் மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடங்குளம்:
கூடங்குளத்தில் மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
நண்பர்கள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஆறுமுகத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் நாராயணன் (வயது 42). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது, ஊரில் கூலித்தொழிலாளியாக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (42), வெல்டிங் தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.
கள்ளக்காதல்
செந்தில் நாராயணனின் மனைவிக்கும், கிருபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த செந்தில் நாராயணன் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுதொடர்பாக செந்தில் நாராயணனுக்கும், கிருபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அரிவாள் வெட்டு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் நாராயணன் தனது மனைவியிடம் சமாதானம் பேசி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். மேலும் கிருபாகரன் மீதும் ஆத்திரத்தில் இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே வந்த கிருபாகரனை அங்கிருந்த செந்தில் நாராயணன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் நாராயணனை தேடி வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே அரிவாளால் வெட்டும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவங்களால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தில் நாராயணன் ஊரில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ேபாலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.