குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி சாவு
ஆரணி அருகே குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் திருமலை (வயது 30), நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி மரகதத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு திருமலை தனது நண்பர்களுடன் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் திருமலை அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தாமரைபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திருமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.