பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை
பேராவூரணி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி
சிவகங்கை மாவட்டம் குளத்துவேல்பட்டியை சேர்ந்தவர் அரசப்பன். இவருடைய மகன் முத்து(வயது 29). இவர், டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.
இவருடைய சகோதரியை தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் சகோதரியை பார்ப்பதற்காக முத்து அடிக்கடி பேராவூரணிக்கு வந்து சென்றார்.
மாணவியை பாலியல் பலாத்காரம்
கடந்த 2020-ம் ஆண்டு பேராவூரணிக்கு வந்த முத்து பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை பார்த்தார். அவர் அருகில் சென்ற முத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதேபோல் தொடர்ந்து முத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
போலீசில் புகார்
இதன் காரணமாக அந்த சிறுமி சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது முத்து தன்னிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பாலத்காரம் செய்ததாக கூறினார். இதனையடுத்து முத்துவிடம் இது குறித்து கேட்டபோது அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். முத்துவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
30 ஆண்டுகள் சிறை தண்டனை
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.