அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலா செல்லும் கூலி தொழிலாளி மகள்
அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலா செல்லும் கூலி தொழிலாளி மகள்
மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் சிறப்பிடம் பெற்று அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலா கூலி தொழிலாளியின் மகள் செல்கிறார்.
கலை திருவிழா
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் பன்முக திறன்களை வெளிபடுத்த நல்ல ஒரு வாய்ப்பாக கலைதிருவிழா இருந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து கல்வி சாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம் இயக்குதல், வானவில் மன்றம், வினாடி-வினா போட்டி தொடர்பாக பள்ளி அளவிலும் மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும் போட்டிகள் நடந்தன. இதில் இலக்கிய மன்ற சார்பில் கட்டுரை எழுதுதல் போட்டி, பேச்சு போட்டிகள் நடந்தன.
மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
அதன்படி ஒவ்வொரு தலைப்பினை கொடுத்து நடந்த பேச்சு போட்டியில் திருவாரூர் தாலுகா கல்யாணமகாதேவி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் சாதனா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினார்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டனர்.
சென்னையில் கல்வி சுற்றுலா போன்று அழைத்து சென்று பயிற்சி கொடுத்தனர். பயிற்சியின் போது மாணவர்களை தினமும் ஒவ்வொரு ஆசிரியர்கள் பார்வையிட்டு அவர்களின் நடவடிக்கை, பழக்கவழக்கங்கள், பேச்சு திறமை, ஆளுமை திறமை ஆகியவற்றை மாணவர்களுக்கு தெரியாமல் மதிப்பீடு செய்து தேர்வு நடத்தியுள்ளனர்.
கூலி தொழிலாளி மகள்
இந்த தேர்வில் மாணவி சாதனா சிறப்பிடம் பெற்றுள்ளார். ஏற்கனவே சிறப்பிடம் பெறுபவர்கள் அமெரிக்காவிற்கு அழைத்து செல்வார்கள் என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்திருந்தது. அதன்படி சாதனா இந்த வாய்ப்பை பெற்றாா். இவர் மற்றும் சிறப்பிடம் பெற்ற மற்ற மாணவ-மாணவிகள் அமெரிக்காவில் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க உள்ளனர். அமெரிக்கா செல்லும் மாணவி சாதனாவின் தந்தை குபேஷ், தாய் ராஜலட்சுமி. பூந்தாலங்குடி பகுதியை சேர்ந்த குபேஷ் கூலி வேலை செய்து வருகிறார். சாதனாவிற்கு 9-ம் வகுப்பு படிக்கும் அண்ணன் உள்ளார்.
அமெரிக்கா செல்ல தேர்வான மாணவி சாதனாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி கல்யாணமகாதேவி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கி, மாணவி சாதனாவுக்கு சால்வை அணிவித்து ஊக்கதொகை வழங்கினார். இதில் வட்டாரகல்வி அலுவலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் தவமணி, துணை தலைவர் மதிவாணன் மற்றும் ஆசிரியைகள், பெற்றோர் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.