வேடசந்தூர் அருகே மொபட் மீது லாரி மோதி பெண் பலி
வேடசந்தூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
வேடசந்தூர் ஆத்துமேடு, கொங்குநகரை சேர்ந்தவர் சாமியாத்தாள் (வயது 55). இவருக்கு சொந்தமான தோட்டம் பூதிப்புரத்தில் உள்ளது. இதையடுத்து இன்று காலை சாமியாத்தாள், தனது தம்பி மகனான சேகர் (35) என்பவருடன் மொபட்டில் பூதிப்புரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அய்யர்மடம் அருகே அவர்கள் வந்தபோது, பின்னால் மதுரையில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில், மொபட்டில் வந்த சாமியாத்தாள், சேகர் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேகர் உயிருக்கு போராடினார். லாரி டிரைவர், லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேகரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சாமியாத்தாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.