தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி ஜெயா (வயது 47). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அங்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த கூட்டரங்கு வெளியே நின்று கொண்டு இருந்த அவர், தான் கொண்டு வந்த பையில் ஒரு கேனில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை திடீரென்று தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், "நிலப்பிரச்சினை தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு என் மீதும், நடக்க முடியாத எனது தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்து விட்டனர். கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில், அந்த இடத்தில் சிலர் கட்டிடம் கட்ட முயற்சி செய்கின்றனர். அதுதொடர்பாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றேன்" என்றார்.
இதையடுத்து அவரை போலீசார் 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.